< Back
மாநில செய்திகள்
கோவிலில் சிலை திருட வந்த வாலிபர் பொதுமக்களிடம் சிக்கினார்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கோவிலில் சிலை திருட வந்த வாலிபர் பொதுமக்களிடம் சிக்கினார்

தினத்தந்தி
|
25 Oct 2023 2:35 AM IST

தஞ்சை அருகே காசவளநாடு கோவிலூரில் உள்ள கோவிலில் சாமி சிலையை திருட வந்த வாலிபரை பொதுமக்கள் வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபருடன் வந்த 2 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பிடாரியம்மன்கோவில்

தஞ்சை அருகே உள்ளது காசவளநாடு கோவிலூர். இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கோவில் உள்ளது. வயல்வெளி பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் குடமுழுக்கு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மதியம் இக்கோவில் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அருகில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயி முருகன் மற்றும் அவரது பேரன் இருவரும் கோவிலுக்கு விரைந்து வந்தனர்.

அப்போது அங்கு மூன்று பேர் கோவில் பூட்டை உடைத்துக்கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் திருடன், திருடன் என சத்தம் போட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் முருகன் மற்றும் அவரது பேரனை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினர். இதற்கிடையில் முருகனின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரில் ஒரு வாலிபரை மட்டும் விரட்டிச்சென்று பிடித்தனர்.

வாலிபர் சிக்கினார்

பின்னர் அந்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். அவருடன் வந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அந்த வாலிபரிடம் கிராம மக்கள் விசாரித்தபோது அவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகரைச் சேர்ந்த அரவிந்த் (வயது27) என்பதும், கோவிலில் சாமி சிலையை திருட வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அரவிந்தை கிராம மக்கள் தஞ்சை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.அதன்பேரில் தாலுகா போலீசார் தப்பியோடி அந்த 2 பேர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்