< Back
மாநில செய்திகள்
பர்தா அணிந்து போலி டைம்பாம், பொம்மை துப்பாக்கியுடன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்...!
மாநில செய்திகள்

பர்தா அணிந்து போலி டைம்பாம், பொம்மை துப்பாக்கியுடன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்...!

தினத்தந்தி
|
5 Feb 2023 10:00 AM IST

துணிவு பட பாணியில் கல்லூரி மாணவன் பொம்மை துப்பாக்கியுடன் வங்கியில் நுழைந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடும்ப வறுமையை போக்க துணிவு பட பாணியில் கல்லூரி மாணவன் பொம்மை துப்பாக்கியுடன் வங்கியில் நுழைந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் கனரா வங்கி உள்ளது. இந்த வங்கியில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வங்கி இயங்கியது. மதியம் 1 மணி அளவில் வங்கிக்குள் 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். அப்போது பர்தா அணிந்த வாலிபர் ஒருவர் வங்கிக்கு வந்தார். அவர் கையுறை அணிந்து இருந்தார்.

பின்னர் அவர் வங்கி காசாளர் கவுண்ட்டருக்கு சென்று சுற்றுமுற்றும் பார்த்தார். பின்னர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காசாளரை நோக்கி நீட்டி பணத்தை எடுத்துக்கொடு, இல்லை என்றால் சுட்டுக்கொன்று விடுவேன் என மிரட்டினார்.

சுட்டுக்கொன்று விடுவேன்

இதனால் பயந்து போன காசாளர், 'அய்யோ திருடன், திருடன், என்னை சுடப்போறான்' என கூச்சல் போட்டார். இதனால் பணியில் இருந்த ஊழியர்களும், வங்கிக்குள் இருந்த வாடிக்கையாளர்களும் திகைத்துப்போனார்கள். அப்போது அந்த ஆசாமி டைம்பாம் போல் ஒன்றை காட்டி வங்கிக்குள் வீசிவிடுவேன் என எச்சரித்துள்ளான். மேலும் அவனிடம் கத்தியும் இருந்தது. பின்னர் வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஒரு ஓரமாக சென்று அமரும்படி எச்சரித்தார்.

அவனிடம் துப்பாக்கி, டைம்பாம், கத்தி ஆகியவை இருந்ததால் பயந்துபோய் அவனை யாரும் பிடிக்க முயற்சிக்கவில்லை. இதற்கிடையில் துணிச்சலுடன் வாடிக்கையாளர் ஒருவர் மட்டும் அந்த ஆசாமியை பின்புறமாக வந்து திடீரென்று தாக்கினார். அதில் அந்த ஆசாமி நிலைகுலைந்தார். அதற்குள் அங்கிருந்தவர்கள் சுற்றிவளைத்து அவனை தாக்கினர். இதனால் அச்சம் அடைந்த அந்த ஆசாமி கொள்ளை முயற்சியை கைவிட்டு துப்பாக்கியுடன் தப்பிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அவரை மடக்கிபிடித்தனர். பின்னர் பர்தாவை கழற்றியோது கறுப்புநிற முகமூடி அணிந்து இருந்தார். உடனே அவரிடம் இருந்த துப்பாக்கி, டைம்பாம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அலங்கியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொம்மை துப்பாக்கி

இதையடுத்து போலீசார் வங்கிக்கு விரைந்து வந்தனர். போலீசாரிடம் அந்த ஆசாமியை வாடிக்கையாளர்கள் ஒப்படைத்தனர். உடனே போலீசார் அவர் வைத்திருந்த துப்பாக்கி, முகமூடி, கையுறை, டைம்பாம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைப்பற்றப்பட்டது என்ன வகை துப்பாக்கி? அது உண்மையான டைம்பாமா? என ஆய்வு செய்தனர். அப்போது அது குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் பொம்மை துப்பாக்கி என்பதும், போலியான டைம்பாம் எனவும் தெரியவந்தது. இதனால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கல்லூரி மாணவர்

பின்னர் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் அலங்கியம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் சுரேஷ் (வயது 19) என்பதும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. அதுவும் வங்கிகளில் கொள்ளை அடிப்பது எப்படி? என்ற படங்களை மட்டும் பார்த்து வந்துள்ளார். சுரேசுக்கு படிக்க ஆர்வமில்லை. மேலும் குடும்ப வறுமையை போக்கவும், சமீபத்தில் வெளியான துணிவு படபாணியில் வங்கியில் கொள்ளையடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி பொம்மை துப்பாக்கி, போலி டைம் பாம் போன்றவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வாடிக்கையாளர்கள் தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். வங்கி செயல்படும் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் துணிவு சினிமா பாணியில் வங்கிக்குள் பொம்மை துப்பாக்கி, போலி டைம்பாமுடன் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்