< Back
மாநில செய்திகள்
கழிவுநீர் கால்வாய் பணியை தடுத்து நிறுத்திய இளைஞர்கள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கழிவுநீர் கால்வாய் பணியை தடுத்து நிறுத்திய இளைஞர்கள்

தினத்தந்தி
|
14 Feb 2023 12:15 AM IST

சுத்தமலையில் மாற்று இடத்தில் அமைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்

மூங்கில்துறைப்பட்டு

சுத்தமலை கிராமம்

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சுத்தமலை கிராமத்தில் வடக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிக்கூட தெரு, கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ததை அடுத்து அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது கிராமத்தில் உள்ள கழிவுநீர் மேற்கு பகுதியில் இருந்து வடக்கு பகுதி வழியாக வந்து தென்பெண்ணை ஆற்றை சென்றடையும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

தடுத்து நிறுத்தினர்

ஆனால் இதில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சம்பந்தமே இல்லாமல் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் நேற்று வழக்கம்போல் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதை அறிந்து வந்த அப்பகுதி இளைஞர்கள் கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். கிராமமக்களுக்கு பயன்படும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து இளைஞர்கள் கூறும்போது, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் 80 சதவீதம் சரியாக உள்ளது. மீதமுள்ள 20 சதவீத கால்வாய் அமைக்கும் பணியை அமைக்க வேண்டிய இடத்தில் அமைக்காமல் சம்மந்தமே இல்லாத பகுதியில் கால்வாயை அமைக்கிறார்கள். இதனால் எந்தவித பயனும் இல்லை. எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கால்வாய் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

வீடியோ வைரல்

பின்னர் பொதுமக்களுக்கு எந்த வித பயனும் இல்லாமல் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை அப்பகுதி இளைஞர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்