அரியலூர்
போதையில் வாழ்வைத் தொலைக்கும் இளைய சமூகம்
|புத்தியைத் தடுமாறச் செய்யும் ஒருவித கிறக்கமே போதை. அதை சுகமாகக் கருதி நாடுபவர்கள் வாழ்வைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.
போதைப்பழக்கத்திற்கு அடிமை
'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி'
என்கிறார், வள்ளுவர்.
போதைக்கு அடிமையானவரை பெற்ற தாய் கூட சகித்துக் கொள்ள மாட்டாள். அப்படியிருக்கும் போது சமுதாயத்தில் பெரியவர்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்? என்று கேட்கிறார். எனவே மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றில் போதையும் ஒன்று.
போதை தரும் பொருளால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. இதனால் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் சமுதாயத்தில் போதைப் பொருட்களும் அதன் பயன்பாடும் வேரறுக்க முடியாத ஆலமர விருட்சமாய் வளர்ந்து வருகின்றன. தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிவதைக் காண முடிகிறது.
நீதிமன்றம் தடை
போதைப்பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பலதரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின்படி, புகையிலை நிறுவனத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனால் ஓரளவு குறைந்து இருந்த போதைப் பொருட்கள் விற்பனை தற்போது அதிகரித்து விட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வர தொடங்கியதற்கு பிறகுதான் போதை பாக்குகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. போதைப்பாக்குகளை பயன்படுத்துபவர்கள் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, ரெயில்வே பிளாட்பாரம், கோவில் வளாகம், சந்தை, பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாக்குகளை சுவைத்து உமிழ்வதால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.
பொது இடங்களில் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அதுபற்றி காண்போம்.
சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- பான்பராக், குட்கா போன்றவை புற்றுநோய்க்கு ஆதாரமாக இருப்பதுடன், பிறர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருக்கிறது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு செய்யவும் இருக்கிறோம். தற்போது இருக்கும் சட்டத்தால் இதனை தடை செய்ய முடியவில்லை என்றால், எந்த வழியிலும் திரும்பவும் விற்பனைக்கு வந்து இளைய சமுதாயத்தினரை பாதிக்காத வகையில், சட்டசபையில் விவாதித்து புதிய சட்டத்தை கொண்டு வரவும் முதல்-அமைச்சர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
அறியாமையில் இளைஞர்கள்
ஐகோர்ட்டில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை நடத்தி வரும் வக்கீல் எம்.கோவிந்தராஜூ:- போதைப்பொருள் பயன்படுத்துவது, விற்பது போன்ற குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது. உலகத்தில் அனைத்து நாடுகளிலும் உள்ள சட்டங்களில் மிகவும் கடுமையான சட்டம் நம் நாட்டில் உள்ள 'போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம்- 1985' (என்.டி.பி.எஸ். சட்டம்). இந்த சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. குறிப்பாக 10 ஆண்டுகள் சிறையும், ரூ.1 லட்சத்துக்கு மேல் அபராதமும் விதிக்கப்படுகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதில் 20 வயது முதல் 30 வயது உள்ள நல்ல குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமையால் அறியாமையால் இது போன்ற தவறுகளை செய்து வழக்குகளில் சிக்கி கொள்கின்றனர். போதைத் தடுப்பு விஷயத்தில் நீதிமன்றமும் கண்டிப்புடன் இருப்பதால் ஜாமீன் கூட கிடைப்பதில்லை. போலீசாரும் தற்போது விழிப்புணர்வுடன் இருந்து போதைப் பொருட்கள் தொடர்புடைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுகின்றனர். அவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற வழக்குகளில் இளைஞர்கள் சிக்காமல் படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடி நேர்மையான முறையில் உழைத்து முன்னுக்கு வரவேண்டும்.
புற்றுநோய் தடுப்பு
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து விழிப்புணர்வு அளித்து வரும் சர்புதீன்:- புகைப்பழக்கமும், பாக்கு போடும் பழக்கம் எனக்கு இருந்து வந்தது. இதனால் பேச முடியாத நிலை ஏற்படும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் திடீரென்று எனது குரல் வளையில் புற்றுநோய் ஏற்பட்டு பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். கடவுள் புண்ணியத்தாலும், அடையாறு புற்றுநோய் தடுப்பு மருத்துவமனை மருத்துவர்களின் உதவியால் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து உள்ளேன். தற்போது தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று புகையிலை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு அளித்து வருகிறேன். பள்ளியில்தான் இந்தப்பழக்கம் முதன் முதலில் ஆரம்பிக்கிறது. இதனை தடுப்பதற்காக மாணவர்கள் மத்தியில் புற்றுநோயின் கொடுமை குறித்து அதிகம் எடுத்துக் கூறி வருகிறோம். இளைஞர்கள் புகையிலை பழக்கத்தில் சிக்காமல் இருக்க வேண்டும்.
வேதனை அளிக்கிறது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல்:- பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி புற்றுநோயால் உடல் உறுப்புகள் செயலிழந்து அழிவை நோக்கி பயணிப்பது வேதனை அளிக்கிறது. அரசு கடுமையான நடவடிக்கைகளையும், தண்டனைகளை வழங்கினாலும் கள்ளச்சந்தையில் மிகப்பெரும் அளவில் வடநாட்டு சமுக விரோத கும்பல்களால் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க முடியவில்லை. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளோடு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து நல்வழிப்படுத்தினால் மட்டுமே இளைய தலைமுறையினரை காப்பாற்ற முடியும்.
உடல் நலத்திற்கு தீங்கு
காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அனுராமன்:- குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் சுவையையும், அதனால் ஏற்படும் போதையையும் தெரிந்து கொள்ளாத வரை நல்லதே. நண்பர்கள் இது போன்ற போதை வஸ்துகளை அறிமுகப்படுத்தும் பொழுது அதை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்ப்பது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு நல்லது. இதனை பயன்படுத்த தொடங்கி விட்டால் அந்தப் பழக்கத்தை விட மனமில்லாமல் அதில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்களை பார்க்கும்போது மனவேதனை ஏற்படுகிறது. மேற்கண்ட புகையிலை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு இளைஞர்களின் சிந்தனை திறனையும் கேள்விக்குறியாகி விடுகிறது.
சமூக விரோத செயல்கள்
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா:- பள்ளி மாணவர்கள் கூலிப், கஞ்சா போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை இழக்கின்றனர். இதனால் அவர்களுக்கு கல்வியில் பாதிப்பு ஏற்படுகிறது. சமுதாயத்திலும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. போதை வஸ்துகளை பயன்படுத்துவதால் சமூக விரோத செயல்களில் ஈடுபட தூண்டுகிறது. இதனால் பாலியல் குற்றங்கள், சிறு வயதிலேயே கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட தூண்டுகிறது. போதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.