< Back
மாநில செய்திகள்
பந்தல் அமைக்கும்போது மின்சாரம் தாக்கி 2-வது மாடியில் இருந்து விழுந்த வாலிபர் சாவு
சென்னை
மாநில செய்திகள்

பந்தல் அமைக்கும்போது மின்சாரம் தாக்கி 2-வது மாடியில் இருந்து விழுந்த வாலிபர் சாவு

தினத்தந்தி
|
24 Feb 2023 2:48 PM IST

வீட்டின் 2-வது மாடியில் பந்தல் அமைக்கும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள அகரம்தென், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 24). இவர், சாமியானா பந்தல் அமைக்கும் வேலை செய்து வந்தார்.

இவர், பதுவஞ்சேரியை அடுத்த கஸ்பாபுரத்தில் நடைபெறும் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக ஒரு வீட்டின் 2-வது மாடியில் சாமியானா பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன், அகரம்தென் பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார்(25) என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பந்தல் போடுவதற்கான கம்பியை உயர்த்தியபோது அருகில் சென்ற மின்கம்பியில் உரசியது. இதில் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதில் சீனிவாசன் 2-வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். அரவிந்த்குமார் மாடியிலேயே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். அரவிந்த்குமார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்