< Back
மாநில செய்திகள்
உல்லாசத்துக்கு வீட்டிற்கு அழைத்த இளம்பெண்.. நேரில் சென்ற என்ஜினீயருக்கு காத்திருந்த அதிர்ச்சி
மாநில செய்திகள்

உல்லாசத்துக்கு வீட்டிற்கு அழைத்த இளம்பெண்.. நேரில் சென்ற என்ஜினீயருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தினத்தந்தி
|
8 Feb 2024 7:32 AM IST

2 பேரும் செல்போனிலும், இணையதளம் வாயிலாகவும் காதலை வளர்த்து வந்தார்கள்.

சென்னை,

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 37). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடன் இளம்பெண் ஒருவர் இணையதளம் மூலம் பழக்கம் ஆனார். அந்த இளம்பெண் அவரை காதலிப்பதாக சொன்னார். முகத்தை பார்க்காமல், முகவரியும் தெரியாமல் அந்த இளம்பெண்ணின் இனிப்பான பேச்சை மட்டும் நம்பி விக்னேஸ்வரன் அவரை காதலிக்க தொடங்கினார். 2 பேரும் செல்போனிலும், இணையதளம் வாயிலாகவும் காதலை வளர்த்து வந்தார்கள். வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை போட்டு இளம்பெண் விக்னேஸ்வரனை தனது உல்லாச வலையில் விழ வைத்தார்.

இந்த நிலையில் நேற்று பகலில் அந்த இளம்பெண் விக்னேஸ்வரனை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். வீட்டில் தான் தனியாக இருப்பதாகவும், நேரில் வந்தால் உங்களுக்கு இன்ப விருந்து கிடைக்கும் என்றும் ஆசை காட்டினார். இதை உண்மை என்று நம்பி விக்னேஸ்வரனும் இளம்பெண் சொன்ன எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

குறிப்பிட்ட வீட்டில் அந்த இளம்பெண்ணோடு 2 ஆசாமிகளும் இருந்தனர். அவர்கள் விக்னேஸ்வரனை அடித்து உதைத்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்கள். அவரது வங்கி கணக்கில் இருந்து 'கூகுள் பே' மூலம் ரூ.25 ஆயிரத்தை பறித்தனர். மேலும் அவர் அணிந்திருந்த வெள்ளி சங்கிலி ஒன்றையும் கொள்ளையடித்தனர்.

மேலும் ரூ.15 ஆயிரம் வேண்டும் என்று கேட்டனர். விக்னேஸ்வரன் வீட்டுக்கு சென்று அந்த பணத்தை 'கூகுள் பே' மூலம் அனுப்புவதாக சொன்னார். அதை நம்பி விக்னேஸ்வரனை விடுவித்தனர். ஆனால் அவர் நேரடியாக எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு நடந்த சம்பவத்தை கூறி புகார் கொடுத்தார். உடனடியாக போலீஸ் படையினர் குறிப்பிட்ட வீட்டுக்கு சென்றனர்.

அங்கு இருந்த இளம்பெண்ணையும், அவருடன் இருந்த அவரது நண்பர்கள் ஏழுமலை மற்றும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணன் ஆகியோரையும் மடக்கி பிடித்தனர். 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விக்னேஸ்வரனிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் வெள்ளி சங்கிலி மீட்கப்பட்டது.

இளம்பெண் உள்பட 3 பேரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட இளம்பெண் இதேபோல் காதல் நாடகமாடி ஏராளமான இளைஞர்களை தனது உல்லாச வலையில் விழ வைத்து பணம் பறித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்