< Back
மாநில செய்திகள்
முருங்கைக்காய் விளைச்சல் அமோகம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

முருங்கைக்காய் விளைச்சல் அமோகம்

தினத்தந்தி
|
22 Aug 2023 6:31 PM GMT

கறம்பக்குடி பகுதியில் முருங்கைக்காய் அமோக விளைச்சல் கண்டுள்ளது. இருப்பினும் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கொடி முருங்கை சாகுபடி

கறம்பக்குடி பகுதியில் நெல், கரும்பு, வாழை போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்ட போதிலும் கத்தரி, வெண்டை, மரவள்ளி கிழங்கு, முருங்கைக்காய் போன்ற தோட்ட பயிர்கள் சாகுபடி செய்வதிலும் சமீப காலமாக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன்படி கறம்பக்குடி அருகே உள்ள ராங்கியன் விடுதி, குழந்திரான்பட்டு, சிவ விடுதி, கட்டுவான் பிறை, தோப்பநாயகம் உள்ளிட்ட பகுதிகளில் கொடி முருங்கை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நல்ல வரவேற்பு

அவ்வப்போது பெய்த மழை மற்றும் ஆழ்குழாய் பாசனம் மூலம் செடிகள் வளர்ந்து தற்போது முருங்கைக்காய்கள் நீண்டு கொத்து கொத்தாய் செழித்து வளர்ந்து உள்ளன. இப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கள் மண்ணின் தன்மையால் மிக ருசி நிறைந்ததாக இருக்கும்.

இதனால் கறம்பக்குடி பகுதி முருங்கைக்காய்களுக்கு வெளியூர்களில் நல்ல வரவேற்பு உண்டு. எனவே வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் கறம்பக்குடிக்கு வந்து முருங்கைக் காய்களை விலை பேசி வாங்கி செல்கின்றனர்.

நஷ்டம்

தற்போது கறம்பக்குடி பகுதியில் முருங்கைக்காய் அறுவடை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முருங்கைக் காய்களை கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். முருங்கைக்காய்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ள போதும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் முருங்கைக்காய் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது. தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை உள்ளது.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து முருங்கைக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில், முருங்கையின் இலை, பூ, பட்டை, காய் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. இதனால் முருங்கை சாகுபடி செய்வதில் எங்களை போன்ற விவசாயிகளுக்கு ஆத்ம திருப்தி உள்ளது. கொடி முருங்கை மட்டுமல்லாது நாட்டு முருங்கைகளையும் தோப்பாக வளர்த்து வருகிறோம்.

கடைகளில் ஒரு முருங்கைக்காய் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடம் சொற்ப விலைக்கே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். வியர்வை சிந்தும் விவசாயிகள் லாபம் பார்ப்பதை விட வியாபாரிகள் பல மடங்கு கூடுதலாக லாபம் பார்க்கின்றனர். எனவே முருங்கை விவசாயிகள் நலன் காக்க தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்