உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக மக்களுக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
|தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் மாநாடாக அமைய வேண்டும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், ஆட்சிக்கு வந்ததற்கு பின்னரும் கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாட்டை அறியாத மக்கள் எவரும் இருக்க முடியாது. மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு, அதில் கவனம் செலுத்தாமல் சுய விளம்பரம் செய்வதிலேயே இரண்டரை ஆண்டுகளை கழித்திருப்பதை பொதுமக்கள் நாள்தோறும் சந்திக்கும் இன்னல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஜனவரி 7மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 26 லட்சத்து 90 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார்.
தேவைப்படக்கூடிய உட்கட்டமைப்பு, உரிய நில ஒதுக்கீடு, தங்கு தடையற்ற மின்சாரம், ஒற்றைச் சாளர அனுமதி என எந்த விதமான அடிப்படைகட்டமைப்பு வசதிகளையும் இதுவரை மேம்படுத்தியதாக தெரியவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் தொடங்க முன்வந்திருக்கும் நிறுவனங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமை எனவும், இல்லையெனில் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் வெற்று காகிதமாகவே போய்விடும் என பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற திமுகவின் 152வது தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஏற்படவிருக்கின்ற வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிடாமல் இருப்பது தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் வரிப்பணமான ரூ.100 கோடி செலவில் நடைபெற்று முடிந்திருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக அரசின் மற்றுமொரு விளம்பரமாக இல்லாமல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் மாநாடாக அமைய வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.