< Back
மாநில செய்திகள்
மருமகளை கொன்ற தொழிலாளி தற்கொலை
தென்காசி
மாநில செய்திகள்

மருமகளை கொன்ற தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
11 July 2023 12:15 AM IST

ஆலங்குளம் அருகே மருமகளை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆலங்குளம்:

நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி, ஓராண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த தம்பதியின் மகன் தமிழரசன், ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி இருந்தார்.

தங்கராஜ், அவருடைய மருமகள் முத்துமாரி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தமிழரசன் சொந்த ஊரில் நிலம் வாங்குவதற்காக பணம் அனுப்பி உள்ளார். மேலும் அந்த நிலத்தை தனது மனைவி முத்துமாரியின் பெயரில் வாங்குமாறு தந்தை தங்கராஜிடம் கூறியுள்ளார். ஆனால் அதை கேட்காமல் தங்கராஜ் தனது பெயரிலேயே நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் முத்துமாரிக்கும், தங்கராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தமிழரசனும் தங்கராஜ் மீது கோபத்தில் இருந்தார். இந்த நிலையில் மகன் தன் மீது கோபத்தில் இருக்க மருமகள் முத்துமாரி தான் காரணம் என்று நினைத்த தங்கராஜ் அவரை கடந்த ஏப்ரல் மாதம் கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த முத்துமாரி இறந்தார். இந்த கொலை குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

தனது மனைவி ஏற்கனவே இறந்து விட்டதால் ஆதரவின்றி இருந்த தங்கராஜ், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டியில் உள்ள தனது அக்காள் பத்மினியின் வீட்டுக்கு கடந்த 8-ந்தேதி சென்றார். அவரை தனது வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறி பத்மினி சண்டை போட்டுள்ளார். ஆனால் தங்கராஜ், தனக்கு ஆதரவு யாரும் இல்லை. இதனால் இங்குதான் தங்குவேன் என்று பத்மினியிடம் கூறி இருக்கிறார். இதனால் பத்மினி கோபித்துக் கொண்டு அருகில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார். தங்கராஜ் மட்டும் பத்மினியின் வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று காலை அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே அக்கம்பக்கத்தினர் பத்மினியிடம் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு தங்கராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மினி இதுகுறித்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தங்கராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளை கொன்ற தொழிலாளி ஜாமீனில் வந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்