< Back
மாநில செய்திகள்
தொழிலாளியை காரில் கடத்தி சென்று தாக்குதல்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தொழிலாளியை காரில் கடத்தி சென்று தாக்குதல்

தினத்தந்தி
|
12 July 2023 7:49 PM GMT

தொழிலாளியை காரில் கடத்தி சென்று தாக்குதல்

ஒரத்தநாடு அருகே தொழிலாளியை காரில் கடத்தி சென்று தாக்கிய விவசாயி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணிடம் தகராறு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கீழப்பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிகேசவன் (வயது38). இவரது மனைவி கமலி (35). இவர்கள் 2 பேரும் கடந்த சில வருடங்களாக ஒரத்தநாட்டை அடுத்துள்ள பின்னையூர் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரது வீட்டின் அருகே தங்கி, அந்த பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

கடந்த 10-ந் தேதி கமலி உள்ளிட்ட சில பெண்கள் பாளாம்புத்தூரை சேர்ந்த விவசாயி சரவணன் (47) என்பவரது வயலுக்கு நடவு பணிக்கு சென்றுள்ளனர். அப்போது சரவணன், கமலியை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. வேலை முடிந்து வீடு திரும்பிய கமலி இதுகுறித்து தனது கணவர் ஆதிகேசவனிடம் கூறியுள்ளார்.

கடத்தி சென்று தாக்குதல்

இதனை கேட்ட ஆதிகேசவன் செல்போன் மூலம் சரவணனிடம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சரவணன் சிலருடன் காரில் புறப்பட்டு சென்று வெட்டிக்காடு பாலம் அருகே கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த ஆதிகேசவனை பிடித்து வலுக்கட்டாயமாக மிரட்டி காரில் ஏற்றி கடத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஒரத்தநாடு டவுன் பகுதியில் பதுங்கி இருந்த சரவணன் மற்றும் கடத்தப்பட்ட ஆதிகேசவன் உள்ளிட்டவர்களை மடக்கி பிடித்தனர்.

விவசாயி உள்பட 3 பேர் கைது

இதுகுறித்து ஆதிகேசவன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் கடத்தல், வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணன், உறந்தைராயன்குடிக்காடு பாலமுருகன் (46), புலவன்காடு உதயன் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்