< Back
மாநில செய்திகள்
சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
தேனி
மாநில செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

தினத்தந்தி
|
1 Oct 2023 1:30 AM IST

கடமலைக்குண்டு அருகே சுவர் இடிந்து விழுந்தத்தில் தொழிலாளி பலியானார். படுகாயமடைந்த மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மயிலாடும்பாறை அருகே உள்ள ஆலந்தளிர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 51). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மயிலாடும்பாறை அருகே சோலைத்தேவன்பட்டியில் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டிற்கு செப்டிக் டேங்க் அமைக்க குழி வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன், வேலுச்சாமி (45), தாண்டவதேவன் (55), முத்தன் (48), ஜோதி (40), கருப்பசாமி (52) ஆகியோரும் குழி வெட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த சேதமடைந்த சுவர் திடீரென்று இடிந்து, குழிவெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில், ராமர் மற்றும் வேலுச்சாமி இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இதையடுத்து சக தொழிலாளர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த ராமர் மற்றும் வேலுச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேலுச்சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்