< Back
மாநில செய்திகள்
சொத்தை பிரித்து தருவதில் சகோதரர்கள் ஏமாற்றுவதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சொத்தை பிரித்து தருவதில் சகோதரர்கள் ஏமாற்றுவதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

தினத்தந்தி
|
30 Aug 2022 2:54 PM IST

சொத்தை பிரித்து தருவதில் சகோதரர்கள் ஏமாற்றுவதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அம்மணம் பாக்கம் கிராமம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் அழகேசன் (வயது 34). கூலித்தொழிலாளி. இவரது மனைவி புஷ்பலதா (34). மகள் தியா (11). மகன் சாய்நாத் (7). அழகே சனின் சகோதரர்கள் அவருக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து கொடுக்காமல் தாங்களே அனுபவித்து வந்ததாக தெரிகிறது. அழகேசன் அந்த பகுதியை சேர்ந்த ஊர் பெரியவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியும் சொத்தை பிரித்து கொடுக்கவில்லை . இதுகுறித்து அழகேசன் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் அவரையும் அவரது சகோதரர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தபோது அழகேசனை அவரது சகோதரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவரை அனுப்பி வைத்தனர்.

மனவிரக்தி அடைந்த அழகேசன் நேற்று காலை தனது மனைவி புஷ்பலதா மற்றும் மகன், மகளை அழைத்து கொண்டு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு

உள்ளே வந்த அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தன்னுடைய உடலில் ஊற்றி மனைவி, மகன், மகள் உடலிலும் ஊற்றி விட்டு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அழகேசன் தனது கையில் தேசிய கொடியை ஏந்தியவாறு காணப்பட்டார்.

அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் அவர்கள் அனைவரையும் சுற்றிவளைத்து பிடித்து மேற்கொண்டு எதுவும் செய்ய விடாமல் தடுத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த ஒரு பெண் மண்எண்ணெய் ஊற்றி சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்த அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை ஆசுவாசப்படுத்தினார். அப்போது அங்கு வந்த கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களிடம் விசாரணை நடத்த சென்றார்.

அப்போது அழகேசன் கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுதார். அவர்களை சமாதானம் செய்த கலெக்டர் இது சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். உடனடியாக கலெக்டர் தனது செல்போன் மூலம் திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அழகேசன் மற்றும் அவரது குடும்பத்தினரை சமாதானப்படுத்தி விசாரணைக்காக ஆட்டோ மூலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்