கன்னியாகுமரி
மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடக்கிறது
|குமரி மாவட்டத்தில் மழையால் சேதமைடந்த நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கூறினார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) வாணி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) ஜோதிபாசு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலாஜான், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் சிவகாமி, பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாயிகள் புலவர் செல்லப்பா, தாணுப்பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் உழவன் செயலி பயன்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து காணொலி மூலமாக எடுத்துரைக்கப்பட்டது. அப்போது விவசாயி புலவர் செல்லப்பா பேசுகையில், "பழையாற்றை மீட்டெடுப்போம் என முயற்சி மேற்கொண்டுள்ள கலெக்டருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாகர்கோவில் மாநகராட்சி மேயரை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு விவசாயிகள் அனைவரும் துணை இருப்போம்" என்றார். இதை தொடர்ந்து கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பரசேரி வில்லுக்குறி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். எனவே சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு கீழ் உள்ள நெல்களை மட்டுமே வாங்குகிறார்கள். மற்ற நெல்களை திருப்பி அனுப்புகிறார்கள். தற்போது குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் 17 சதவீதத்துக்கு குறைவாக நெல் வழங்க முடியாது. எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தோவாளை பகுதியில் ஏற்கனவே மழை இல்லாமல் நெற்பயிர்கள் கருகி இருந்த நிலையில் விவசாயிகள் கஷ்டப்பட்டு அந்த வயலை விளைய வைத்துள்ளனர். தற்போது நெல்லை கொடுக்க சென்றால் அதிகாரிகள் நெல்களை வாங்காமல் புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது. காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படுவது போல் நெல் விவசாயிகளுக்கும் விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து வருகின்றன. அசல் சம்பா ரகம் நமது மாவட்டத்தில் விற்பனை செய்யப்படவில்லை. குறைவான மகசூல் கிடைக்கிறது. மற்ற ரக நெல்களை விவசாயம் செய்த விவசாயிகளுக்கு ஒன்றரை மேனிமுதல் 2 மேனி வரை கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடியை கைவிட்டு வருகிறார்கள். பாரம்பரிய நெல் விவசாயத்தை ஊக்கப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரவிளை பகுதியில் விளைநிலங்களில் தண்ணீர் புகுவதால் மரச்சீனி மற்றும் வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வள்ளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 6 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதற்கு பதில் அளித்து கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில், குமரி மாவட்டத்தில் 17 சதவீதத்திற்கு மேல் உள்ள நெற்பயிர்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். குமரி மாவட்டத்தில் எவ்வளவு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட இடங்களை புகைப்படம் எடுத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் அல்லது வேளாண் துறை அதிகாரிகளிடம் வழங்கலாம். தற்போது 70 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வள்ளி ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யவும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.