அரியலூர்
விக்கிரமங்கலம் அருகே 12 இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி மும்முரம்
|கொள்ளிடம் ஆற்று தண்ணீர் ஊருக்குள் புகாமல் இருக்க விக்கிரமங்கலம் அருகே 12 இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, அணைக்குடி போன்ற ஊர்கள் கொள்ளிடம் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டன.
இதனால் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது. மேலும் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, தென்னை, நெல், உளுந்து, பருத்தி, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டது.
மணல் மூட்டைகள்
இந்தநிலையில் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அவ்வப்போது கூடுவதும், குறைவாகவும் உள்ளது. இதையடுத்து, கொள்ளிடம் ஆற்று தண்ணீர் ஊருக்குள் புகாமல் இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி விக்கிரமங்கலம் அருகே கரைகளின் வழியாக உபரி நீர் வழிந்து ஓடக்கூடிய மற்றும் உடைப்பு ஏற்படும் என சந்தேகப்படக்கூடிய 12 இடங்களை கண்டறிந்து மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக காசாங்கோட்டை அருகே உள்ள சித்தமல்லி நீர்த்தேக்கத்தின் ஓடையில் இருந்து மணலை மூட்டைகளில் நிரப்பி வைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.