புதுக்கோட்டை
பிரமாண்ட குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் கட்டும் பணிகள் தொடக்கம்
|குளமங்கலம் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி பிரமாண்ட குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளது.
அய்யனார் கோவில்
கீரமங்கலம் அருேக உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஆசியாவின் மிக உயரமான குதிரை சிலை அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்ேபாது 35 அடி உயர பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப்பூ மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக அணிவிப்பது வழக்கம்.
கிராமத்தின் சார்பில் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்து முதல் மாலையாக மலர் மாலை அணிவித்த பிறகு, மலர்கள், பழங்களால் கட்டப்பட்ட மாலைகள் வாகனங்களில் ஏற்றி வந்து அணிவிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாலைகள் குதிரை சிலைக்கு அணிவிக்கப்படுவதால் அதனைக்காண பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதிகளும், மருத்துவ வசதி, தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
மாலை கட்டும் பணி தொடங்கியது
இந்த ஆண்டு மாசிமக திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை, திருநாளூர், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலை கட்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மாலைகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மீறி பிளாஸ்டிக் மாலைகள் கொண்டு வந்தால் குதிரை சிலைக்கு அணிவிக்க அனுமதி இல்லை என்று கடந்த சில ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு முழுமையாக வண்ண வண்ண காகிதங்களை மட்டுமே பயன்படுத்தி பிரமாண்ட மாலைகள் கட்டப்பட்டு வருகிறது.