மயிலாடுதுறை
மண் பானை, அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரம்
|கொள்ளிடம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக மண் பானை, அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மழைக்கால நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக மண் பானை, அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மழைக்கால நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்பானை தயாரிக்கும் பணி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வேட்டங்குடி, ஆச்சாள்புரம், எடமணல், திருக்கருகாவூர், பழைய பாளையம், கொப்பியம் அளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர் பல தலைமுறைகளாக மண் பானை, அடுப்பு, சட்டி, அகல் விளக்குகள் உள்ளிட்ட மண்பாண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக மண் பானை, அடுப்பு, சட்டி தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கனமழையால் பாதிப்பு
கடந்த சில நாட்களாக கொள்ளிடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பானைகள் தயாரிக்கும் பணி மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் தயார் செய்யப்பட்ட மண் பானைகளை சுட முடியாத நிலை ஏற்பட்டதால் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வேட்டங்குடி கிராமத்தில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் ஏரோநாட்டிகல் என்ஜினீயர் துளசேந்திரன் கூறுகையில்:- நாங்கள் பல தலைமுறைகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
தொழிலாளர்கள் அவதி
கடந்த 3 மாதமாக பெய்த கனமழையால் மண்பாண்ட தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது வெயில் அடித்து வருவதால் பொங்கல் பண்டிகைக்காக மண்பானை, அடுப்பு, சட்டி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தயார் செய்யப்பட்ட மண்பானையை சூளையில் வைத்து சுட வைக்கோல், வரட்டி, தென்னை மட்டை உள்ளிட்ட பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மண்பாண்ட தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்
மேலும் தற்போது சில்வர், பித்தளை போன்ற பாத்திரங்கள் வரவால் மண்பாண்ட பொருட்கள் விற்பனை மந்தமாக நடைபெறுவதால் பலர் இந்த தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். எனவே மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தை உயர்த்தி ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும்.
மண்பானை, அடுப்பு, சட்டி ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். தமிழகம் முழுவது 12 ஆயிரம் பேர் தான் நிவாரணம் பெறுகின்றனர். மீதமுள்ள அனைவருக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.