விருதுநகர்
குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி தொடக்கம்
|‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி காரணமாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது.
தாயில்பட்டி,
'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது.
குழாய்களில் உடைப்பு
சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் இருந்து சிவகாசிக்கு செல்லும் குடிநீர் குழாய்களில் உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாகி வந்தது. இதனால் சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோடு சேதமடைந்து வருவதாகவும், சாலையின் அடிப்பாகத்தில் இருக்கும் குழாய்களை அப்புறப்படுத்தி வேறு குழாய் பதிக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் சாலையில் இ்ருந்து 5 அடி தூரத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டது. 4 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இத்திட்டம் 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வீணாக சென்று கொண்டிருந்தது.
பணி தொடக்கம்
இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. அதன் எதிரொலி காரணமாக சிவகாசி மாநகராட்சியில் இருந்து வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து சிவகாசி வரை குழாய்கள் பதிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், குழாய்கள் பதிக்கும் பணி தொடர்ந்து 2 மாதம் நடைபெறும். குழாய்கள் பதிக்க 2 ஆண்டுகள் தாமதம் காரணமாக ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது. ஆதலால் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.