மயிலாடுதுறை
பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும்
|சீர்காழி பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாசன வாய்க்கால்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட கழுமலையார், ராஜன் வாய்க்கால், தெற்கு ராஜன் வாய்க்கால், பொறை வாய்க்கால், அய்யாவையனாறு, காவிரி ஆறு, திருநகரி வாய்க்கால், கோவிந்த காவிரி வாய்க்கால், ஆண்டி வாய்க்கால், ஊசி வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் உள்ளன.
இந்த வாய்க்கால்களை கடந்த சில ஆண்டுகளாக முழுமையாக தூர்வாராமல் பெயரளவில் தூர்வாரியதால் மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக கடைமடை பகுதிகளுக்கு வந்து சேரவில்லை.
இதே போல் மழைக்காலங்களில் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாததால் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக மேட்டூர் அணை திறக்கும் தருவாயில் தான் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படுகிறது. இதனால் பணிகள் முழுமையாக முடிக்கப்படுவதில்லை. எனவே தமிழக அரசு இந்த ஆண்டு சீர்காழி பகுதியில் உள்ள பாசன ஆறு மற்றும் வாய்க்கால்களை முன்கூட்டியே தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும்
இதுகுறித்து விவசாய சங்க தலைவர்கள் சீனிவாசன் கூறுகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் பாசன வாய்க்கால்களை விவசாயிகள் பயன்பெறும் வகையில் முழுமையாக இதுவரை தூர்வாரியது இல்லை. மாறாக கோடைகாலத்தில் தூர்வாராமல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் சில நாட்களுக்கு முன்பு தூர்வாரும் பணியை தொடங்குகின்றனர்.
இதனால் தூர்வாரும் பணிகள் முழுமை பெறாமல் பாதியில் நிறுத்தப்படுகின்றன. தூர்வாரும் பணியினை விவசாய சங்கங்களுக்கு வழங்கினால் மட்டுமே பாசன வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்படும். எனவே அரசு இந்த ஆண்டு முன்கூட்டியே வாய்க்கால்களை தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும் என்றார்.