< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரம் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணி தொடங்கியது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரம் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணி தொடங்கியது

தினத்தந்தி
|
23 July 2023 2:08 PM IST

மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணி 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.

நுழைவு கட்டணம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சா்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு தினமும் வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பஸ், கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களில் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லன் சிலை அருகில் உள்ள நுழைவு வாயில் மற்றும் பூஞ்சேரி அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள நுழைவு வாயில் என 2 இடங்களில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.

ஆண்டுதோறும், நுழைவு கட்டணம் வசூலிக்க மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தனியாருக்கு பொது ஏலம் விடப்பட்டு ஓராண்டுக்கான உரிமம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை 7 மாதத்திற்கு வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க பொது ஏலம் விடப்பட்டு தனியாருக்கு ரூ.94 லட்சத்துக்கு வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

வாகன வரி வசூலிக்க தடை

மேலும், வாகன வசூல் காலம் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதியுடன் முடிந்து விட்டதால், இந்த ஆண்டுக்கான டெண்டர் இன்னும் விடப்படவில்லை. மேலும், கட்டணம் வசூலிக்கும் காலம் முடிந்து, மறு டெண்டர் விடும் வரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாகன கட்டணம் வசூலிப்பது வழக்கம். இந்த நிலையில் வாகன வரி வசூல் கட்டணங்களால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து சுற்றுலா வாகன வரி வசூலிக்கும் பணிக்கு நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என். நேரு தடை விதித்து இருந்தார். அதனால் கடந்த 4 மாதங்களாக மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு வாகன வரி வசூல் செய்யப்படாததால் இங்கு வந்து செல்லும் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக வந்து சென்றன.

மீண்டும் வாகன வரி வசூல்

இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகன நுழைவு கட்டணம் மீண்டும் வசூலிக்க மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வழங்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் நேற்று முதல் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூஞ்சேரி மற்றும் மாமல்லன் சிலை நுழைவு வாயில் என 2 வாகன நுழைவு கட்டண மையத்திலும் சுற்றுலா வாகன வரி வசூலிக்கும் பணி 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.

தனியாருக்கு பொது ஏலம் விடும் வரை பேரூராட்சி நிர்வாகம் மூலம் தினமும் வாகன வரி வசூல் கட்டணம் வசூலிக்கப்படும் என மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்