தேனி
தேனி ராஜவாய்க்காலில் கட்டிட கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் தீவிரம்
|தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் கட்டிட கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் கட்டிட கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தேனி கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து தாமரைக்குளம் கண்மாய் வரை சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு ராஜவாய்க்கால் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளாக இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு வந்தன. காலப்போக்கில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வாய்க்கால் சுருங்கியது. தூர்வாரப்படாமல் தூர்ந்து போனது. இந்த வாய்க்கால் தொடர்பாக தேனியை சேர்ந்த ராஜதுரை என்பவர் தொடர்ந்த வழக்கில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் கடந்த 13-ந்தேதி அதிரடியாக தொடங்கியது. வாய்க்காலில் 166 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கண்டறியப்பட்ட நிலையில் 160-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ஆக்கிரமிப்பின் ஒரு அங்கமாக பழைய பஸ் நிலையத்தில் இருந்த கடைகள், பூமார்க்கெட் போன்றவையும் அகற்றப்பட்டன.
மலரும் நினைவுகள்
இடித்து தரைமட்டமாக்கப்பட்ட கட்டிடங்களின் கழிவுகள் வாய்க்காலில் குவிந்து கிடந்தன. அவற்றை அகற்றி வாய்க்காலை தூர்வாரும் பணிகள் கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. பங்களாமேடு அரசு ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வாரப்பட்டதால் அந்த பகுதியில் அகலமான வாய்க்கால் மீட்கப்பட்டுள்ளது. பங்களாமேடு முதல் தெரு பகுதியில் நேற்று கட்டிட கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடந்தது.
ஒரு காலத்தில் இந்த வாய்க்காலில் மக்கள் குளித்து மகிழ்ந்தனர். ஆக்கிரமிப்பு காரணமாக வாய்க்கால் சுருங்கியதால் மழைநீர் கூட வடிந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது வாய்க்கால் மீண்டு வருவதால் அகலமான வாய்க்காலை மக்கள் பலரும் வேடிக்கை பார்த்துச்சென்ற வண்ணம் உள்ளனர். மக்கள் பலரும் வாய்க்காலோடு தங்களின் மலரும் நினைவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து பரவசம் அடைந்து வருகின்றனர்.
எஞ்சிய ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, வாய்க்காலை முழுமையாக தூர்வாரி, இருபுறமும் சிமெண்டு கரை அமைத்து சாக்கடை கழிவுநீர் கலக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.