திருவாரூர்
மகளிர் குழு கட்டிடத்தை இடிக்க வேண்டும்
|மகளிர் குழு கட்டிடத்தை இடிக்க வேண்டும்
விழல்கோட்டகத்தில் சேதம் அடைந்துள்ள மகளிர் குழு கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர ேவண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகளிர் குழு கட்டிடம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள விழல்கோட்டகத்தில் அந்த பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் பயன்பாட்டிற்காக மகளிர் குழு கட்டிடம் அரசு சார்பில் கட்டப்பட்டது. இந்த மகளிர் குழு கட்டிடத்தை அந்த பகுதி கிராமத்தில் உள்ள பெண்கள் மகளிர் குழு கூட்டம் மற்றும் மகளிர் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம், மகளிர் சார்ந்த அரசு திட்டங்கள் குறித்த செயல்பாடுகளை விவாதிப்பது போன்ற பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. மேலும் கட்டிடத்தில் சிறு-சிறு விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் விரிசல்கள் ஏற்பட்ட இடங்களின் வழியாக மழை நீர் உள்ளே சென்று சேதத்தை ஏற்படுத்தியது.
இடித்து அகற்ற வேண்டும்
இதனால் மகளிர் குழுவினர் இந்த கட்டிடத்தை பயன்படுத்த முடியாமல் போனது. நாளடைவில் மகளிர் கட்டிடம் பூட்டியே கிடந்தது. கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து காணப்படுகிறது. தற்போது பழுதடைந்த மகளிர் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக மகளிர் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி பெண்கள் மற்றும் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.