< Back
மாநில செய்திகள்
சின்னசேலத்தில் பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டி கற்பழிப்பு - வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சின்னசேலத்தில் பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டி கற்பழிப்பு - வாலிபர் கைது

தினத்தந்தி
|
15 Jun 2023 12:15 AM IST

சின்னசேலத்தில் பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தனியாக தூங்கிய பெண்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா கோவையூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் கிஷோர் (வயது 23). தற்போது சின்னசேலத்தில் வசித்து வரும் கிஷோர், காய்கறி விற்பனை செய்யும் மினி ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சின்னசேலம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒரு பெண், தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூங்கினார்.

மிரட்டி கற்பழிப்பு

இதை அறிந்த கிஷோர், அந்த பெண் வீட்டின் கதவு பூட்டை உடைத்து, உள்ளே புகுந்துள்ளார். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தினார். இதில் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண், அழுது புலம்பியபடி தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார்.

அதனை பொருட்படுத்தாத கிஷோர், அப்பெண்ணை நிர்வாணமாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் வீடியோவை காண்பித்தும், கழுத்தை இறுக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டியும் அந்த பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

வாலிபர் கைது

உடனே அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். இதில் அச்சமடைந்த கிஷோர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அந்த பெண், தனது உறவினர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். பின்னர் தனது, வீட்டில் பதுங்கி இருந்த கிஷோரை பெண்ணின் உறவினர்கள் பிடித்து சின்னசேலம் போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்