திண்டுக்கல்
சேலையில் தீப்பிடித்து பெண் பலி
|கொடைரோடு அருகே வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் பலியானார்.
கொடைரோடு அருகே உள்ள கல்லடிப்பட்டியை சேர்ந்தவர் ஸ்டாலின். கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி விக்டோரியா (வயது 30). கடந்த மாதம் 15-ந்தேதி இவர், வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது விக்டோரியா அணிந்து இருந்த சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு, கணவர் ஸ்டாலின் ஓடிவந்து விக்டோரியா மீது பற்றிய தீயை அணைத்தார்.
உடல் கருகி உயிருக்கு போராடிய அவர், சிகிச்சைக்காக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான காயம் அடைந்த ஸ்டாலினும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் மேல்சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் விக்டோரியா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விக்டோரியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.