கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற பெண்
|காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மின்சாரம் பாய்ச்சி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கொடூரமாக நடந்த அந்த கொலை பற்றி போலீசார் கூறியதாவது:-
மர்மச் சாவு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 33). தனியார் பஸ் டிரைவர். அவருடைய மனைவி கீர்த்தனா (30) இவர்களுக்கு ஜனஸ்ரீ (13) கவின்ஸ்ரீ (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.சம்பவத்தன்று இரவு மர்மமான முறையில் மோகன்ராஜ் அவரது வீட்டில் இறந்துகிடந்தார்.இதுபற்றி ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து மர்மச்சாவு என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினார்கள். மோகன்ராஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மர்மச் சாவு குறித்து அவருடைய மனைவி கீர்த்தனாவிடம் விசாரித்தனர். அவரோ தன்னுடைய கணவர் மோகன்ராஜ் எப்படி இறந்தார் என்பது தனக்கு தெரியாது என்று அழுது புறண்டார்.
மருத்துவ அறிக்கை
இதனால் சாவுக்கு வேறு என்ன காரணம் இருக்கக்கூடும்? என்று போலீசார் குழம்பி இருந்த வேளையில், ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவ அறிக்கை வந்தது. மோகன்ராஜ் மின்சாரம் தாக்கி இறந்திருக்கிறார் என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் கீர்த்தனா மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தூங்கிக்கொண்டு இருந்தவர் எப்படி மின்சாரம் தாக்கி இறந்தார்? என்ற கேள்வி எழவே ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் ஆயில்பட்டி போலீசார் கீர்த்தனாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
கள்ளத்தொடர்பு
அப்போது கதிரேசன் என்பவருக்கும், கீர்த்தனாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் அழைத்துவந்து துருவித்துருவி நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வரகூர் கோம்பையைச் சேர்ந்தவர் கதிரேசன். அவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். மோகன்ராஜ் பஸ் ஓட்டச்சென்றதும் கதிரேசன் அங்கு வருவதும், கீர்த்தனாவிடம் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கதிரேசனுக்கும், கீர்த்தனாவுக்கும் 4 மாதங்களுக்கும் மேலாக கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதல் விவகாரம் மோகன்ராஜ் காதுகளுக்கு போனது. அவர் மனைவி கீர்த்தனாவை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை.
மின்சாரம் பாய்ச்சி கொலை
இதற்கிடையே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மோகன்ராஜை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று கீர்த்தனா குழம்பில் தூக்க மாத்திரைகளை போட்டு உள்ளார். இரவு மோகன்ராஜ் சாப்பிட்டுவிட்டு உணர்வற்ற நிலையில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த கதிரேசன், கீர்த்தனாவுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து ஒயர் மூலம் மின்சாரம் எடுத்து தூங்கிக் கொண்டிருந்த மோகன்ராஜ் உடலில் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்து இருக்கிறார்கள்.
கைது
கணவர் மோகன்ராஜ் எப்படி இறந்தார் என்று போலீசார் கேட்டதற்கு தனக்கு ஒன்றும் தெரியாதது போல் கீர்த்தனா முதலில் நாடகம் ஆடினார். போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.
இதையடுத்து போலீசார் மர்ம சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி கீர்த்தனா மற்றும் கதிரேசனை கைது செய்தனர். இருவருக்கும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அவர்கள் இருவரையும் சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திய பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.