சேர்ந்து வாழ மறுத்ததால் மனைவி குத்திக்கொலை - தொழிலாளி வெறிச்செயல்
|சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருச்சி இடையாத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் சிவக்குமார் (வயது 39), பெயிண்டர். இவருக்கும், சமயபுரம் மருதூரை சேர்ந்த நர்மதாவுக்கும் (31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குருபிரசாத் (8) என்ற மகனும், ரித்திகா (6) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 3 வருடங்களாக நர்மதா தனது குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் - காங்கயம் சாலையில் ஓலப்பாளையம் அடுத்த சுக்குட்டிபாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் நூல் மில் குடியிருப்பில் தங்கி இருந்து அதே மில்லில் வேலை செய்து வந்தார்.
சிவக்குமார் அவ்வப்போது வெள்ளகோவில் வந்து குழந்தைகளை பார்த்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. குழந்தைகள் இருவரும் சுக்குட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை குழந்தைகளை பார்க்க சிவக்குமார் வெள்ளகோவில் வந்தார். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை தனது மகன் குருபிரசாத்தின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடுவதற்காக அங்கேயே தங்கி உள்ளார். மில் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு சிறுவன் குருபிரசாத் பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடி உள்ளனர். பின்னர் அனைவரும் தூங்க சென்றனர்.
நேற்று காலை 6 மணிக்கு சிவக்குமார் அவசரம், அவசரமாக பதற்றத்துடன் வீட்டிலிருந்து தனது மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றதை அருகே குடியிருந்தவர்கள் பார்த்தனர். அதே நேரம் வீட்டில் குழந்தைகள் குருபிரசாத், ரித்திகா ஆகியோர் அழும் சத்தம் தொடர்ச்சியாக கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது நர்மதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையில் ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டதாக சிவக்குமார் காங்கயம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மீண்டும் இருவரும் சேர்ந்து வாழலாம் என சிவக்குமார் தெரிவித்தபோது நர்மதா மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டு குழந்தை அழுதபோது நர்மதா வீட்டில் உள்ள பால் பாக்கெட்டை எடுத்து கொடுக்கும்படி கூறியதாகவும், அதற்கு சிவக்குமார் அடுத்த வீட்டு குழந்தைகளுக்கு எதுக்கு நான் வேலை செய்ய வேண்டும் என கூறியதாகவும் தெரிகிறது.
இதனால் ஆவேசமடைந்த நர்மதா அப்படியென்றால் நீ என் வீட்டில் இருக்க வேண்டாம் வெளியே போ என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் வீட்டில் காய்கறிகள் வெட்ட வைத்திருக்கும் கத்தியை எடுத்து நர்மதாவை குத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.