< Back
மாநில செய்திகள்
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து
அரியலூர்
மாநில செய்திகள்

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
4 Aug 2023 12:56 AM IST

ஜெயங்கொண்டம் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கத்தியால் குத்திய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மனைவிக்கு கத்திக்குத்து

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் மனோகர் (வயது 28), லாரி டிரைவர். இவருடைய மனைவி பானுப்பிரியா (22). இவர்களுக்கு மாதுஷா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மனோகர் அடிக்கடி மது குடித்து விட்டு தகராறு செய்து வந்ததால் மனவேதனை அடைந்த பானுப்பிரியா தனது தந்தை நீலமேகம் வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் மனோகர் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்ததால் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அழைத்து சென்ற மனோகர் அங்கு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பானுப்பிரியாவின் கழுத்தில் குத்தியுள்ளார்.

தீவிர சிகிச்சை

இதில் படுகாயம் அடைந்த பானுப்பிரியா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனால் பீதியடைந்த மனோகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பானுப்பிரியாவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து பானுப்பிரியாவின் தந்தை நீலமேகம் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய மனோகரை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்