மது போதையில் அட்டகாசம்: தாய்-தந்தையுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
|தாய்- தந்தையுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
கணவனை தாய்- தந்தையுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டியை சேர்ந்த 2 பேரும் இந்த வழக்கில் சிக்கினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள அலகுமலை ஊராட்சிக்குட்பட்ட எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் வடிவேல் (வயது 30). இவருக்கும், அதே ஊராட்சிக்குட்பட்ட அருகில் உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வடிவேலை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி முதல் காணவில்லை.
இது குறித்து அவரது மனைவி திவ்யா அவினாசிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து வடிவேலை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் 8 மாதங்கள் ஆகியும் வடிவேலை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வடிவேலின் தாயார் வேலாள், தனது மகனை 8 மாதங்களாக காணவில்லை என்றும், உடனே கண்டுபிடித்து தருமாறும் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜிகுமாரிடமும் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பாலாஜி (48) என்பவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் வடிவேல் அவரது மனைவி திவ்யா மற்றும் மாமனார், மாமியாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
வடிவேல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி திவ்யாவை அடித்து, உதைத்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த வடிவேல் திவ்யாவை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் திவ்யா தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். வடிவேல் அங்கு சென்றும் மனைவியை அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த திவ்யா தனது கணவர் இனிமேலும் திருந்தமாட்டார் என எண்ணி அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி திவ்யா தனது தாய் மரியாள் (48), தந்தை தேவராஜ் (50), அக்காள் கணவர் பொங்கலூரை அடுத்த காட்டூர் புதூரை சேர்ந்த தெய்வேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வடிவேலுவுக்கு விஷ மாத்திரையை கொடுத்து பின்னர் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் இரவு வரை காத்திருந்து கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த முத்து (32), மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பவுன்ராஜ் (53), பாலாஜி ஆகியோர் உதவியுடன் வடிவேலின் உடலை கருப்பு பாலித்தீன் கவரால் சுற்றி அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தூக்கி வீசி உள்ளனர். பின்னர் அவர்கள் வடிவேல் மாயமாகிவிட்டதாக அனைவரையும் நம்ப வைத்து நாடகமாடியுள்ளனர். பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் மாட்டிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து திவ்யா உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து திவ்யா அளித்த தகவலின் பேரில் போலீசார் நேற்று வடிவேல் உடல் கிடந்த கிணற்றுக்கு சென்று பல்லடம் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி வடிவேலின் உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.