வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கணவனை போலீசில் சிக்க வைத்த மனைவி
|சிவப்பிரசாத் கஞ்சாவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
ஜோலார்பேட்டை,
ஆந்திர மாநிலம் தச்ஷாராம் பகுதியை சேர்ந்த பெதராஜ் என்பவரின் மகன் சிவபிரசாத் (வயது 36). இவர் ஆந்திர மாநிலம் ராஜ்மன்றி பகுதியை சேர்ந்த ஜான்சி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
சிவபிரசாத் ஏலகிரி மழையில் தனியார் ஓட்டலில் வேலைபார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த இடையம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிவப்பிரசாத் கஞ்சாவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கஞ்சா பயன்படுத்திவிட்டு அவ்வப்போது தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் தனது வீட்டில் பூந்தொட்டி மற்றும் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். வெளியில் கஞ்சா கிடைக்காத நிலையில் வீட்டில் வளர்த்த கஞ்சா செடிகளை பயன்படுத்தி வந்துள்ளார். அத்துடன் மனைவி ஜான்சியை துன்புறுத்தி வந்துள்ளார். துன்புறுத்தல் அதிகமாகவே தனது கணவர் கஞ்சா செடி வளர்த்து, பயன்படுத்தி வருவது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜான்சிபுகார் அளித்தார்.
அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சென்று சிவபிரசாத் வீட்டில் வளர்த்து வந்த கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் சிவபிரசாத்தை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கஞ்சா வளர்த்த கணவனை, மனைவியே போலீசில் சிக்கவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.