< Back
மாநில செய்திகள்
30 அடி உயரத்துக்கு பீய்ச்சியடித்த தண்ணீர்
சிவகங்கை
மாநில செய்திகள்

30 அடி உயரத்துக்கு பீய்ச்சியடித்த தண்ணீர்

தினத்தந்தி
|
24 Sept 2023 12:15 AM IST

காரைக்குடி அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு காரணமாக 30 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சியடித்தது

காரைக்குடி

கடந்த 2010-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்துக்காக பல்வேறு இடங்களில் நீர் வெளியேற்றும் நிலையம், தண்ணீர் சேகரிப்பு மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு இடங்களில் ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

இதில் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சொக்கநாதபுரத்தில் இருந்து பட்டமங்கலம் செல்லும் சாலையில் கொட்டக்குடி என்ற கிராமத்தில் உள்ள தரைப்பாலம் வழியாக காவிரி கூட்டுக்குடிநீர் செல்கிறது. அதற்கான குழாயில் உள்ள வால்வு அடிக்கடி உடைவதால் அதிக அளவு குடிநீர் வீணாகி வருகிறது. நேற்று குழாயில் உள்ள வால்வு மீண்டும் உடைந்ததால் சுமார் 30 அடி உயரத்திற்கும் மேல் தண்ணீர் பீய்ச்சியடித்தது. சாலையில் குடிதண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பீய்ச்சி அடித்த தண்ணீரில் இளைஞர்கள் சிலர் குளித்து மகிழ்ந்தனர். பலர் இந்த காட்சியை செல்போன்களில் படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். பல்வேறு கிராமங்களில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இவ்வாறு அடிக்கடி குழாய் உடைந்து குடிநீர் வீணாவது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் வந்து குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தாலும், இனி இதுபோன்று ஏற்படக்கூடாது எனவும் வலியுறுத்தினர். குடிதண்ணீர் பீய்ச்சி அடித்த காட்சிகள், வலைத்தளங்களில் பரவின.

Related Tags :
மேலும் செய்திகள்