வைகை அணையின் நீர்மட்டம் அதிரடியாக உயர்வு - வெள்ள அபாய எச்சரிக்கை
|நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி,
தென் மாவட்டங்களில் இடைவிடாது பெய்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கொட்டித்தீர்த்த மழையால் திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீராய் காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் நேற்று வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,145 கன அடியாக உள்ளது. இதன் மூலம் அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டியுள்ளது. எனவே அணையிலிருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.