< Back
மாநில செய்திகள்
வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது
கடலூர்
மாநில செய்திகள்

வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

தினத்தந்தி
|
27 July 2023 12:59 AM IST

வீராணம் ஏாியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில்,

வீராணம் ஏரி

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடைவழியாக வரும்.

இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினமும் ஒரு வினாடிக்கு வீராணம் நீர் மட்டத்துக்கு ஏற்ப 76 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லணையில் இருந்து கடந்த மாதம் 18-ந் தேதியும், கீழணையிலிருந்து கடந்த 24-ந் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

கீழணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது. இதையடுத்து ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். நேற்றைய நீர்மட்டம் 45 அடியாக இருந்தது. சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. விவசாய பணிகள் நடைபெறாததால் தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. கீழணையின் மொத்த கொள்ளளவான 9 அடியில் நேற்றைய நீர்மட்டம் 3.50 அடியாக இருந்தது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்