< Back
மாநில செய்திகள்
வைகை அணை நீர்மட்டம் 60 அடியை எட்டியது; 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி
மாநில செய்திகள்

வைகை அணை நீர்மட்டம் 60 அடியை எட்டியது; 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
25 Oct 2023 3:00 AM IST

தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக வைகை அணையின் நீர்மட்டம் 60.47 அடியை எட்டியது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக வைகை அணையின் நீர்மட்டம் 60.47 அடியை எட்டியது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்கும் முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது.

கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் தேனி மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் வைகை மற்றும் முல்லைப்பெரியாறு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படவில்லை. அணைகளின் நீர்மட்டமும் சரிந்தது. இதனால் ஜூன் மாதம் முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. முதல்போக விவசாயமும் இந்த ஆண்டு நடைபெறவில்லை.

தொடர் மழை

இதனால் வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலையில் விவசாயிகள், மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதன்படி, வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதையொட்டி தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக தொடர்ந்து மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

குறிப்பாக வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்ததால், அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர தொடங்கியது. கடந்த 15-ந் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53 அடியாக இருந்தது. அதன்பிறகு மழை பெய்து நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் 58 அடியாக உயர்ந்தது.

60 அடியை எட்டியது

இந்தநிலையில் நேற்று வைகை அணையின் நீர்மட்டம் 60.47 அடியை எட்டியது. தற்போது அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,355 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 69 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் வைகை அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்