< Back
மாநில செய்திகள்
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியாக உயர்வு
தேனி
மாநில செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியாக உயர்வு

தினத்தந்தி
|
21 May 2022 5:09 PM GMT

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியாக உயர்ந்தது.

கூடலூர்:

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. தமிழக-கேரள எல்லையில் உள்ள இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி வைத்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறையத்தொடங்கியது. அதன்படி கடந்த 10-ந்தேதி நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.50 அடியாக இருந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்மூலம் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி, நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131 அடியாக இருந்தது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 777 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 100 கனஅடியாகவும் உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- முல்லைப்பெரியாறு அணை 41.4, தேக்கடி 18, கூடலூர் 6.2, உத்தமபாளையம் 2.3, வைகை அணை 1.2, போடி 0.4.

Related Tags :
மேலும் செய்திகள்