தேனி
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது
|நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது.
முல்லைப்பெரியாறு அணை
தமிழக-கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. நடப்பாண்டில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதேபோல் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது.
இதற்கிடையே கடந்த மாதம் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. அதன்படி, கடந்த மாதம் 29-ந்தேதி நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.45 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 509 கன அடியாகவும் இருந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. அதன்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 120.25 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,750 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- முல்லைப்பெரியாறு 39, தேக்கடியில் 38. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.