கள்ளக்குறிச்சி
கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்வு
|தொடா்ந்து பெய்த மழையால் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது.
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 46 அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீரை சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாகவே பருவ மழை மாறி மாறி பெய்து வருவதால் அணை எப்பொழுது நிரம்பும், எப்பொழுது விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்பதை சரியாக கணிக்க முடியாமல் அணை எப்பொழுது நிரம்புகிறதோ அப்போது பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
குடிநீர் தேவைக்காக
கடந்த பருவ மழைக்கு பிறகு கோமுகி அணை திறக்கப்பட்டு பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பிறகு அணையில் போதிய அளவு நீர் இல்லாத நிலையில் குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் சுமார் 25 அடி வரை தண்ணீரை சேமித்து வைத்திருந்தனர்,
இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது லேசானது முதல் மிதமான மற்றும் சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
41 அடியாக அதிகரிப்பு
அதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக கல்வராயன் மலை நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து பொட்டியம், கல்படை, மாயம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வினாடிக்கு 200 கன அடி வரை தண்ணீர் வந்தது. இதனால் 25 அடியாக இருந்த கோமுகி அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து 30 அடி வரை உயர்ந்து வந்த நிலையில் தற்போது 41 அடியாக அதிகரித்துள்ளது. தற்போது கல்படை, பொட்டியம், மாயம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக வினாடிக்கு 60 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் வெகு விரைவில் நிரம்பும் நிலை உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் பருவ மழையின் போது தண்ணீரை சேமித்து வைக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.