< Back
மாநில செய்திகள்
முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக்க வேண்டும் - ராமதாஸ்

File image

மாநில செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக்க வேண்டும் - ராமதாஸ்

தினத்தந்தி
|
13 Aug 2024 10:39 AM IST

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் நமது உரிமையை இம்மியளவு கூட தமிழக அரசு விட்டுத்தரக் கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

கேரளத்தின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதனால் பேரழிவை எண்ணி ஒட்டுமொத்த தமிழகமும் கவலையும், அனுதாபமும் கொண்டிருக்கும் நிலையில், வயநாடு நிலச்சரிவையும், முல்லைப்பெரியாறு அணையையும் தொடர்புப்படுத்தி கேரளத்தில் செய்யப்பட்டு வரும் பொய்யான, அபத்தமான பரப்புரைகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு அனைத்து வழிகளிலும் உதவும் அதே நேரத்தில், தமிழகம் அதன் உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது.

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளத்தின் வயநாடு பகுதியில் ஜூலை 30ம் தேதி ஏற்பட்ட கொடிய நிலச்சரிவில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவையும் உறைய வைத்த அந்த இயற்கைப் பேரிடரின் முழுமையான பாதிப்பும் இன்னும் மதிப்பிடப்படவில்லை. வயநாடு நிலச்சரிவு குறித்த செய்தி வெளிவந்தவுடன் கேரளத்திற்கு உதவிகளை வழங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். இந்த பாதிப்பிலிருந்து கேரளம் விரைவாக மீண்டு வர வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் விரும்புகிறது. ஆனால், இந்த உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தமிழகத்திற்கு எதிரான உணர்வுகள் கேரள மக்களிடையே விதைக்கப்படுகின்றன. இந்த முயற்சி மிக ஆபத்தானது.

வயநாடு நிலச்சரிவைக் காட்டி, முல்லைப் பெரியாறு அணைக்கு மூடுவிழா நடத்த வேண்டும் என்பது தான் அங்குள்ள அரசியல் கட்சிகள் மற்றும் செல்வாக்குள்ள மனிதர்களின் நோக்கமாக இருக்கின்றன. இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை என்னால் கூற முடியும்...

1. வயநாட்டில் ஏற்பட்டது போன்ற நிலச்சரிவு முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் நிகழ்ந்தால், அதனால் பேரழிவு ஏற்படும். அதனால், முல்லைப்பெரியாறு அணையை மூட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணியும் கடந்த 8ம் தேதி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியும் போராட்டம் நடத்தின. அத்துடன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீலைச் இரு அணிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தும் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளனர்.

2. முல்லைப்பெரியாறு அணை வலிமையாக இல்லை என்பதால், அதன் நீர்மட்டத்தை இப்போதுள்ள 142 அடியிலிருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரளத்தை சேர்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

3. முல்லைப் பெரியாறு அணையை கட்டுவதற்கான நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது குறித்து திருவாங்கூர் சமாஸ்தானத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே கடந்த 1886ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் செல்லுமா? என்பதை ஆய்வு செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, அது குறித்து செப்டம்பர் 30ம் தேதி விசாரிக்கவுள்ளது.

4. முல்லைப்பெரியாறு அணை விரைவில் இடிந்து விடும், அதனால் கேரளத்தில் 5 மாவட்டங்கள் அழிந்து விடும் என்று பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் பொய்பரப்புரைகள் செய்யப்படுகின்றன.

வயநாடு நிலச்சரிவால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கூறினாலும் கூட, முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக செய்யப்படும் பரப்புரைகளுக்கு கேரள அரசின் மறைமுக ஆதரவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அனைத்து மக்களையும் கலங்க வைத்த பேரிடரைக் கூட, தமிழகத்திற்கு எதிராக பயன் படுத்திக் கொள்ள கேரள அமைப்புகள் முனைவது வருத்தமளிக்கிறது. இதை அனுமதிக்கக் கூடாது.

முல்லைப்பெரியாறு அணை நமது சொத்து; அதன் நீரை பயன்படுத்திக் கொள்வதும், அணையை வலுப்படுத்தி அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதும் நமது உரிமை. இதில் தமிழ்நாடு அரசு எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளக்கூடாது. முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள நிலப் பரப்பின் குத்தகை ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்கே தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது; இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியம் காரணமாகவே இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் நமது உரிமையை இம்மியளவு கூட தமிழக அரசு விட்டுத்தரக் கூடாது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைப்பது, அணை அமைந்துள்ள நிலத்தின் குத்தகை ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது ஆகியவை தொடர்பான இரு வழக்குகளிலும் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, முல்லைப்பெரியாறு பாசன உழவர்களின் நலனைக் காக்க தமிழக அரசு வாதிட வேண்டும்.

இன்னொருபுறம், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். பேபி அணையை வலுப்படுத்துவதன் மூலமாகவே இதை சாத்தியமாக்க முடியும். ஆனால், அதற்குத் தடையாக உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி மறுக்கிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கிலும் சாதகமான தீர்ப்பைப் பெற்று அணையை வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். அதன் மூலம் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்