< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது

தினத்தந்தி
|
26 Oct 2022 4:26 AM GMT

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

மேட்டூர்,

கர்நாடக மற்றும் கேரள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. மேலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதனால் ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து 15 நாட்களாக இங்குள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளம் மூழ்கடித்தபடி வெள்ளம் சீறி பாய்ந்து காவிரி ஆற்றில் ஓடியதால் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டது.

தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் 35 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

நீர்வரத்து சீரானதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் இன்று முதல் அனுமதி அளித்துள்ளது.

கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டதால் பரிசல் ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அருகில் கடை வைத்துள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9.30 மணி அளவில் 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதில் நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடியும், 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 8 ஆயிரத்து 500 கன அடியும் கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி வீதம் என மொத்தம் 30 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

மேலும் செய்திகள்