கரூர்
தவுட்டுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
|கரூரில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. தவுட்டுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பெண் உயிர் தப்பினார்.
வானில் கருமேகங்கள்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கரூரில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. மாலை 4.40 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர், தாந்தோணிமலை, சுங்ககேட், காந்திகிராமம், பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பெய்தது. பின்னர் இரவு வரை தூறிக்கொண்டே இருந்தது.இந்த திடீர் மழையால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். ஒருசிலர் குடைப்பிடித்து சென்றதை காணமுடிந்தது. இந்த மழையால் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
குளித்தலை, வேலாயுதம்பாளையம்
குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதலே வெயில் அடித்து வந்தாலும் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு சிறிது நேரம் மிதமான மழை பெய்தது. பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் இரவு நேரங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாலை நேரங்களில் குளிர்ச்சியான சூழல் இருந்தது.வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 5 மணியளவில் இடியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. பின்னர் கன மழை பெய்தது.
இடி- மின்னலுடன் கனமழை
இதேபோல் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தவுட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், கட்டிப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு, புன்னம் சத்திரம், மரவாபாளையம், சேமங்கி, வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், முத்தனூர், சேமங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து இடி- மின்னலுடன் கனமழை பெய்தது.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் மிகவும் அவதிப்பட்டனர். அதேபோல் விவசாயிகள் பயிரிட்டிருந்த கரும்பு, வாழை, வெற்றிலை, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
சுவர் இடிந்தது
இந்தநிலையில் நன்செய் புகழூர், தவுட்டுப்பாளையம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையின் காரணமாக மேட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜெகநாதன் மனைவி ராணி (வயது 58) என்பவரது வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ராணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புகழூர் தாசில்தார் முருகன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.