< Back
மாநில செய்திகள்
விடிய, விடிய பெய்த கனமழை: காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
கரூர்
மாநில செய்திகள்

விடிய, விடிய பெய்த கனமழை: காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

தினத்தந்தி
|
15 Oct 2023 10:58 PM IST

நொய்யல் பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள வேட்டமங்கலத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் கலைச்செல்வன். இவர்கள் அந்த பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்கள். இந்தநிலையில் நொய்யல், வேட்டமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் குமாரசாமியின் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனால் சத்தம் கேட்டு குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் எழுந்து வெளியே ஓடினர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர். ஆனால் வீட்டினுள் அவர்கள் நிறுத்தி வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. மேலும், வீட்டினுள் இருந்த பீரோ, கட்டில், டி.வி., உணவு பொருட்கள் அனைத்தும் நாசமாயின.

நேரில் ஆறுதல்

இதுகுறித்து தகவல் அறிந்த புகழூர் தாசில்தார் முருகன், வேட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, குமாரசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மேல் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும், இடிந்த சுவர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

தவுட்டுப்பாளையம், தளவாபாளையம், நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்தது. இந்தநிலையில் பாப்புலர் முதலியார் வாய்க்காலை தூர்வார படாததால் வாய்க்காலில் செல்ல வேண்டிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், காகித ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை தடுக்க வேண்டும் வாய்க்காலை சரியான முறையில் தூர்வார வேண்டும், மழைநீரை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்