புதுக்கோட்டை
கல்குவாரியை மூட வலியுறுத்தி நடைபெற இருந்த நடை பயணம் ரத்து
|பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கல்குவாரியை மூட வலியுறுத்தி நடைபெற இருந்த நடை பயணம் ரத்து செய்யப்பட்டது.
வத்தனாக்குறிச்சி அருகே உள்ள வெவ்வயல்பட்டி கிராமத்தில இ்யங்கி வந்த தனியார் கல்குவாரியால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடைபயணமாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வரை செல்ல இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கனிம வளத்துறை இணை இயக்குனர் விஜயராகவன், இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி, கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குவாரி சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த அவர்கள் நடை பயணத்தை ரத்து செய்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.