அரியலூர்
இறந்தவரின் உடலை சாலையோரம் தகனம் செய்ய முயன்ற கிராம மக்கள்
|இறந்தவரின் உடலை சாலையோரம் கிராம மக்கள் தகனம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:
சாலையோரத்தில் விறகுகளை அடுக்கினர்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் காலனித்தெருவை சேர்ந்தவர் ஆச்சிக்கண்ணு(வயது 70). இவர் வயது முதிர்வு காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உடலை தகனம் செய்ய மயானத்திற்கு விறகுகளை கொண்டு செல்ல முயன்றபோது, மயானத்துக்கு செல்லும் பாதையில் முழங்கால் அளவுக்கு சேறும், சகதியுமாக இருந்துள்ளது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செந்துறை - இலைக்கடம்பூர் சாலையின் ஓரத்தில் இறந்தவரின் உடலை தகனம் செய்ய விறகுகளை அடுக்கினர்.இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற செந்துறை தாசில்தார் பாக்கியம் விக்டோரியா, செந்துறை போலீசார், வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் பிரபாகரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அழகு துரை ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதையை சீரமைத்து தந்தால் மட்டுமே, இறந்தவர் உடலை மயானத்துக்கு கொண்டு செல்வோம். இல்லையென்றால் இங்குதான் தகனம் செய்வோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
வாக்குவாதம்
மேலும் கடந்த ஒரு ஆண்டாக கிராம மக்கள் அந்த சாலையை சீரமைக்க பல முறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு மேலும் உங்கள் வார்த்தையை நம்ப மாட்டோம் என்று கூறி அரசு அதிகாரிகளிடம், கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு 3 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தற்காலிகமாக மயான பாதை சீரமைக்கப்பட்டது. பின்னர் இறந்தவரின் உடலை உறவினர்கள் மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.