< Back
மாநில செய்திகள்
ரேஷன் பொருட்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ரேஷன் பொருட்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்

தினத்தந்தி
|
18 Nov 2022 6:47 AM GMT

ரேஷன் பொருட்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட லட்சுமாபுரம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே கிராமத்தில் வாடகை கட்டடத்தில் ரேஷன் பொருட்கள் பல ஆண்டுகளாக வழங்கி வந்தனர்.

இந்த நிலையில், ரேஷன் கடை இருக்கும் வாடகை கட்டிடம் பழுதடைந்ததால், மழை பெய்யும் போது, அரிசி, பருப்பு போன்ற ரேஷன் பொருட்கள் நனைந்து விடுகிறது என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து அந்த பகுதி மக்கள், ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.1000 வீதம் வசூலித்து, பொதுப்பணித்துறை ஏரிக்கு அருகே புதிய கட்டடம் கட்டினர். வருவாய் துறையினர் சர்வே செய்து பொதுமக்கள் கட்டிய ரேஷன் கடை இருக்கும் இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது அங்கு ரேஷன் கடை செயல்படக்கூடாது என அதிகாரிகள் அறிவித்தனர். இருப்பினும் பொதுமக்கள் புதிய கட்டடம் கட்டி சில தினங்களுக்கு முன்பு திறப்பு விழா நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று ரேஷன் பொருட்கள் இறக்குவதற்கு லாரி மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் லட்சுமாபுரம் பழைய ரேஷன் கடையில் இறக்க முயன்றனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ரேஷன் பொருட்கள் நாங்கள் கட்டிய புது கடையில் இறக்கி வினியோகம் செய்ய வேண்டும் என்று முற்றுகையிட்டு பொருட்களை இறக்க விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசரா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மக்களிடம் சமரசம் பேசியும் அவர்கள் ஏற்கவில்லை.

பின்னர் தாசில்தார் மற்றும் ஆர், டி.ஓ., தலைமையில் சமதான கூட்டம் நடத்திய பின்பு லட்சுமாபுரம் கிராமத்தில் பொருட்களை இறக்காமல், ரேஷன் பொருட்கள் திருத்தணி நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் லட்சுமாபுரம் பகுதியில் 6 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்