திண்டுக்கல்
போட்டி போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்
|வடமதுரை அருகே பெரியகுளத்தில் கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.
வடமதுரை அருகே பாடியூரில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம் உள்ளது. நத்தத்தில் இருந்து செல்லும் சந்தனவர்த்தி ஆற்றில் சில மாதங்களுக்கு முன் நீர்வரத்து ஏற்பட்டது. அப்போது கிராம மக்கள் ஆத்துமரத்துபட்டியில் வரத்து வாய்க்காலை சுத்தம் செய்து ஆற்றில் இருந்து குளத்துக்கு நீரை திருப்பினர். இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. குளம் மறுகால் பாய்ந்தால் மீன்பிடி திருவிழா நடத்துவது கிராமங்களில் ஐதீகம். அதன்படி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை ஊர் பொதுமக்கள் பெரியகுளத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் குளம் அருகே உள்ள அக்கம்மாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன் பின்பு குளத்துக்கு ஊர்வலமாக சென்றனர். இதைத்தொடர்ந்து முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாலுச்சாமி கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து கரையோரம் காத்திருந்த கிராம மக்கள் உற்சாகத்துடன் குளத்திற்குள் இறங்கினர். பின்னர் அவர்கள் வலை மற்றும் கூடைகளை பயன்படுத்தி போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.
இதில் தேளி, விரால், ஜிலேபி, கட்லா உள்ளிட்ட மீன்கள் சிக்கியது. அதில் ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை மீன்கள் கிடைத்தது. அதனை கிராம மக்கள் சமைத்து சாப்பிடுவதற்கு உற்சாகத்துடன் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர். இன்னும் சிலர் மீன்களை தங்களது உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.