தஞ்சாவூர்
மாற்றுவழி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் போராட்டம்
|தேவராயன்பேட்டை அருகே மாற்றுவழி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெலட்டூர்;
தேவராயன்பேட்டை அருகே மாற்றுவழி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்று வழி
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா தேவராயன்பேட்டை அருகே பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை- விக்ரவாண்டி நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. பொன்மான்மேய்ந்த நல்லூர்- கருப்பூர் இடையே உள்ள சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுவழி ஏற்படுத்தி தர கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். கிராமமக்கள் சென்று வர மாற்றுவழி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்காததால் பொன்மான் மேய்ந்த நல்லூர் கிராம மக்கள் தஞ்சை- விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்துக்கு தேவராயன்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணை தலைவர் பாரதி முன்னிலை வகித்தார். இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டு வரும் பொறியாளர்கள் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் மற்றும் போராட்டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பணிகள் பாதிப்பு
அப்போது கிராம மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் பணிகள் தொடங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். கிராமமக்கள் போராட்டம் காரணமாக பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை -விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேல் பணிகள் பாதிக்கப்பட்டது.