கடலூர்
நெல் நடவு பணியை தடுத்து நிறுத்தி கிராமமக்கள் போராட்டம்
|விருத்தாசலம் அருகே சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை மீ்ட்டு தரக்கோரி நெல் நடவு பணியை தடுத்து நிறுத்தி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்
மணிமுக்தாற்றங்கரை
விருத்தாசலத்தை அடுத்த பரவலூர் ஊராட்சிக்குட்பட்ட எருக்கங்குப்பம், கலரங்குப்பம் ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாரேனும் இறந்தால் அவர்களின் உடல்களை விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் கொண்டு சென்று அடக்கம் செய்வது வழக்கம்.
தற்போது மணிமுக்தாற்றங்கரையில் தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அதன் அருகே உள்ள கரையோர பகுதி வழியாக சென்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
பாதையின் குறுக்கே இரும்பு கேட்
இந்த நிலையில் சுடுகாட்டுக்கு வழக்கமாக சென்று வரும் பாதையின் குறுக்கே தனி நபர் ஒருவர் திடீரென கேட் அமைத்து பூட்டு போட்டு பூட்டி விட்டார். இதனால் மேற்படி கிராமங்களில் இறந்து போனவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுடுகாட்டிற்கு சென்று வந்த பாதையை மீட்டு தரக்கோரி அப்பகுதி மக்கள் விருத்தாசலம் தாசில்தார், சப்-கலெக்டர், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தொடர்ந்து புகார் மனுக்கள் கொடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
போராட்டம்
இந்த நிலையில் நேற்று சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் தனிநபர் உழவு செய்து நெல் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதை அறிந்து அங்கு திரண்டு வந்த கிராமமக்கள் நடவு பணியில் ஈடுபட்டிருந்தவரிடம் நாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் வழிப்பாதையில் நடவு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, இளங்கோவன், கிராம நிர்வாக அலுவலர் மாயக்கண்ணன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது எங்களுக்கு சுடுகாட்டு பாதையை மீட்டு தராவிட்டால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் பலகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என கூறினார்கள்.
சமாதான கூட்டம்
இதற்கு வருகிற திங்கட்கிழமை அன்று சாமதான கூட்டம் நடத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்ற கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.