< Back
மாநில செய்திகள்
குடிநீர் கேட்டு கோவிலில் காலிக்குடங்களுடன் குடியேறி கிராம மக்கள் போராட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

குடிநீர் கேட்டு கோவிலில் காலிக்குடங்களுடன் குடியேறி கிராம மக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
24 Aug 2023 12:54 AM IST

பனவடலிசத்திரம் அருகே கோவிலில் காலிக்குடங்களுடன் குடியேறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலாபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக திருமலாபுரம் கிராமத்திற்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் குடிநீர் உடனடியாக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் ஏராளமான பெண்கள் மற்றும் கிராம மக்கள் அங்குள்ள பேச்சியம்மன் கோவிலில் குடியேறும் அறப்போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

மழைக்காலங்களில் பெய்யும் மழையை நம்பியே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் இப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் தோட்டங்களில் உள்ள நீர்மட்டம் வெகுவாக குறைந்து தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. பல இடங்களில் மகசூல் செய்யப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களை காப்பாற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் காலிக்குடங்களுடன் கோவிலில் குடியேறி அறப்போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

இதையடுத்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள் கூறுகையில், 'குடிநீர் செல்லும் குழாய்களின் அடைப்புகள் ஏற்பட்டு மேல்நிலைத்தொட்டிகளில் குடிநீர் சரியாக செல்லாத காரணத்தால் உரிய நேரத்தில் குடிநீர் வழங்க இயலவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அவர் கூறுகையில், 'மானூர், மேலநீலிதநல்லூர், குருவிகுளம், புளியங்குடி பகுதிகளில் புதிய பைப்லைன் அமைப்பதற்காக ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பைப் லைன் அமைத்த பின்பு இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஏற்கனவே உள்ள குடிநீர் பைப் லைனில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டு, 2 நாட்களுக்குள் சீராக குடிநீர் வழங்கப்படும்' என்றார்.

ஆனால் கிராம மக்கள் இதை ஏற்க மறுத்து ெதாடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ஆதிநாராயணன், மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள், பனவடலிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் தற்போதைய சூழ்நிலையில் 2 நாட்களில் திருமலாபுரத்திற்கு அன்றாட குடிநீர் வினியோக தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். புதிய பைப் லைன் அமைத்து குடிநீர் சீராக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கிராம மக்கள் ேபாராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்