< Back
மாநில செய்திகள்
காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி காதலியின் திருமணத்தை நிறுத்திய கிராம நிர்வாக அதிகாரி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி காதலியின் திருமணத்தை நிறுத்திய கிராம நிர்வாக அதிகாரி

தினத்தந்தி
|
10 Jan 2023 2:23 PM IST

காதலித்த பெண்ணுடன் இருந்த புகைப்படங்களை நிச்சயித்த மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உள்ளாவூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணுக்கு அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதில் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், காஞ்சீபுரம் அருகே வல்லக்கோட்டையில் கிராம நிர்வாக அதிகாரியாக ராஜேஷ் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணை ராஜேஷ் திருமணம் செய்ய மறுத்ததால் பெண் வீட்டார் வேறு ஒருவருக்கு கடந்த மாதம் நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜேஷ் காதலிக்கும்போது அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படங்களை நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு அனுப்பியும் மற்றும் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் ராஜேஷ் மீது சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாலவாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர் ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண் அளித்த புகாரின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்