கள்ளக்குறிச்சி
மாணவியை தூக்கிச்சென்ற வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு
|கனியாமூர் பள்ளியில் மர்மமான முறையில் இறந்த மாணவி ஸ்ரீமதியை ஆசிரியைகள் தூக்கிச்சென்ற வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த மாதம் 13-ந்தேதி இறந்தார். கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த இந்த மாணவியின் பெற்றோர் சாவுக்கு நீதிக்கேட்டு போராட்டத்தில் இறங்கினர்.
இதில் கடந்த 17-ந்தேதி அன்று மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
5 பேர் கைது
மேலும் மாணவி சாவு தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காவலாளி மற்றும் ஆசிரியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கைதான 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
வீடியோ காட்சி
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி வகுப்பறையில் இருந்து சீருடையில் நடந்து செல்வது, வகுப்பறைக்கு சோகத்துடன் சென்று பெஞ்சில் படுப்பது போன்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பள்ளி விடுதியில் இருந்து மாணவி கீழே விழுந்து கிடப்பது, அவரை 3 ஆசிரியைகள் மற்றும் காவலாளி ஒருவர் தூக்கி செல்லும் காட்சியும் வெளியானது. அந்த வீடியோ காட்சி அதிகாலை 5.23 மணிக்கு பதிவாகியுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சி.சி.டி.வி. காட்சியில் மாணவி கீழே விழுந்து கிடந்ததை போன்றும், அந்த மாணவியை தூக்கி செல்லும் காட்சி மட்டுமே இடம் பெற்றிருந்தது.
ஆனால் மாடியில் இருந்துதான் மாணவி கீழே விழுந்தாரா என்பது தொடர்பாக அந்த வீடியோவில் காட்சி ஏதும் இல்லை. இதனால் மாணவி சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.