திருப்பூர்
பராமரிப்பு இன்றி கிடக்கும் கால்நடை மருத்துவமனை
|காங்கயத்தில் கால்நடைமருத்துவமனை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம்
காங்கயத்தில் கால்நடைமருத்துவமனை பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகனம் நிறுத்தும் இடம்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறையும், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலும், கவனிப்பாரற்றும் கிடப்பதால் மருத்துவமனை வளாகம் குப்பைகளை கொட்டும் இடமாகவும், மண் குவியல்களை கொட்டும் இடமாகவும், விபத்துக்குள்ளாகிய வாகனங்களை நிறுத்துமிடமாகவும் மாறி வருகிறது.
காங்கயம் இனக்காளைகளுக்கு பெயர் பெற்றது காங்கயம் பகுதி. இந்த காங்கயத்தில் கால்நடைகள் சார்ந்து விவசாயம் பெருமளவில் நடக்கிறது.காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கால்நடை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கால்நடைகளை வளர்த்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலிப்பணியிடங்கள்
காங்கயம் பகுதியில் கால்நடைகளுக்கான மருத்துவ பராமரிப்புக்காக காங்கயம் கால்நடை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் கால்நடைகளுக்கான மருத்துவ பராமரிப்பு அவசியமாக உள்ளது. ஆடுகள், மாடுகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் என அனைத்து உயிரினங்களுக்கும் மருத்துவ பராமரிப்பு அவசியமாக உள்ளது.
இந்த நிலையில் காங்கயம் கால்நடை மருத்துவமனையில் தற்போது போதுமான மருத்துவர்கள் இல்லாத காரணத்தினாலும், ஒரு கால்நடை மருத்துவர், 2 கால்நடை உதவி பராமரிப்பாளர்களும் மட்டுமே உள்ளதால் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிரமமாக உள்ளது. மேலும் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலும் உள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
மேலும் மருத்துவர்களே இல்லாத மருத்துவமனையில் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது மேலும் தற்போது காங்கயம் பகுதியில் சாலைகள் அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர்கள் அங்கு இருந்து எடுக்கப்படும் மண் மற்றும் கற்களை இந்த மருத்துவமனை வளாகத்தினுள் கொட்டியுள்ளனர். இதனால் கால்நடைகளை மருத்துவமனைக்கு எடுத்து வரும் கால்நடை விவசாயிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. மேலும் கால்நடை மருத்துவமனை வளாகமும் முறையான பராமரிப்பு செய்யப்படாமல் கவனிப்பாரற்று இருக்கிறது. அதனால் கால்நடை மருத்துவமனையில் இது போன்று கொட்டப்படும் மண் மற்றும் கற்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவமனையில் பற்றாக்குறையாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கால்நடை விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.