வேலூர்
குண்டும், குழியுமாக புழுதி பறக்கும் வேலூர்-ஆற்காடு சாலை
|குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் வேலூர்-ஆற்காடு சாலையில் புதிய சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் வேலூர்-ஆற்காடு சாலையில் புதிய சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆற்காடு சாலை
வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் ஆற்காடு சாலையும் ஒன்று. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். இங்கு ஏராளமான ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள், பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும்.
இந்த நிலையில் ஆற்காடு சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்பணியால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். சாலையின் ஒரு பகுதி முழுவதும் தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட இடத்தில் மண் கொட்டி மூடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாலை சமன் செய்யப்படவில்லை. புதிய சாலையும் அமைக்கப்படவில்லை. அப்பகுதி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. வாகனங்கள் சாலையின் ஒரு பகுதியிலேயே செல்கிறது. அந்த ஒரு பகுதி சாலை தான் இருவழி போக்குவரத்தாக பயன்படுத்தப்படுகிறது. சுருங்கிப்போன அந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்லவும், பொதுமக்கள் நடமாட வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
வாகன ஓட்டிகள் தவிப்பு
புழுதிக்காற்றில் வாகனங்களை இயக்க முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் திணறிப்போகின்றனர். ஆங்காங்கே பழைய சாலையில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட மண், கற்கள் போக்குவரத்துக்கு இடையூறாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடை பணிகள் மெத்தனப் போக்கில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சைதாப்பேட்டை முருகன் கோவில் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை செல்ல வாகன ஓட்டிகள் படாத பாடுபட வேண்டி உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணத்தை வெறுக்கும் அளவுக்கு மக்களின் மனநிலை தள்ளப்பட்டுள்ளது. அங்கு ஏற்படும் திடீர் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
விரைவில் புதிய சாலை
மேலும் வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயலும் போது அவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்படுகிறது. இந்த சாலையால் ஒருவர் பலியான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியும் வரை கனரக வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. விரைந்து பணிகள் முடித்து புதிய சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்துள்ளன. சாலை அமைக்க கலெக்டர் குமாரவேல்பாண்டியனும் அறிவுறுத்தி உள்ளார். தற்போது சாலை அமைப்பதற்கு தடையில்லா சான்றும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கப்படும்' என்றனர்.